< Back
மாநில செய்திகள்
மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்..?  ப.சிதம்பரம் அறிவுரை
மாநில செய்திகள்

மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்..? ப.சிதம்பரம் அறிவுரை

தினத்தந்தி
|
19 Nov 2024 9:25 AM IST

5 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு பிறகு, பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறை ஓரளவு தணிந்தது. எனினும் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனிடையே வடகிழக்கு மாநிலத்தின் தற்போதைய "கொந்தளிப்பான" சூழ்நிலையை கையாள்வதில் மாநில அரசுக்கு உதவுவதற்காக சுமார் 5 ஆயிரம் துணை ராணுவப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மணிப்பூரில் மேலும் 5 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல.

முதல்-மந்திரி பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்னைக்கு காரணம் என ஒப்புக்கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல்.

உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோ, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும்.

பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டுவிட்டு மணிப்பூருக்குச் சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும்" என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்