< Back
மாநில செய்திகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்காத மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்காத மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி

தினத்தந்தி
|
14 Dec 2024 12:00 PM IST

பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பதால், பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்பின் 5 மாதங்களுக்கு மேலாகியும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டி பா.ம.க. சார்பில் பல அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற கல்வித்துறை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்களை நியமிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதன்பின் 40 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமின்றி, 3192 ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 2800 ஆக குறைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்திகள் சரியானவை என்றால், அவை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைக்கத் துடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவிருப்பதாகவும், அதுவரைக்கும் தற்காலிக ஏற்பாடாக 5154 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்து 19 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் 3 ஆண்டுகள் ஆகியும் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக ஆசிரியர்கள் மறு நியமனம் செய்யப்படுகிறார்களே தவிர, நிலையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதன் பின்னர் 3 ஆயிரத்திற்கும் கூடுதலான பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்ட நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் அதிகமாகி விட்டது.

ஆனால், 15 மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இளைய தலைமுறையினருக்கு கல்வி வழங்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், நியமனங்களை தள்ளிப் போடுவதன் மூலம் அவர்களுக்கான ஊதியச் செலவை மிச்சப்படுத்தலாம் என்று திட்டமிடுகிறது திராவிட மாடல் அரசு. கல்விச்செலவை மிச்சப்படுத்த நினைக்கும் இந்த அரசு எப்படி மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியும்?

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக அதிகரித்து விட்டது. இத்தகைய சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு புத்தாண்டுக்குள் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்