விழுப்புரத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் பொன்முடி விளக்கம்
|விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவத்:-
விழுப்புரம் மாவட்டத்தில் 63.5 செ.மீ அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 67 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 4,096 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பெரும்பாதிப்பு அடைந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகுகளில் மீட்கப்பட்டுள்ளனர். 2 நாட்களில் 16,660 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 70 சதவீதம் இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 80,000 ஹெக்டேர் பாசன நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருகிறது.
சேதமடைந்த சாலைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி பார்வையிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாத்தனூர் அணை திறப்பு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் பதில் தந்துள்ளார். 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.