< Back
மாநில செய்திகள்
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள்
மாநில செய்திகள்

வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள்

தினத்தந்தி
|
24 Nov 2024 12:25 PM IST

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

குமரி,

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் அதிகமாக வருவார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதுபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்