< Back
மாநில செய்திகள்
பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
6 Dec 2024 3:19 PM IST

தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சென்னையின் முக்கியப் பகுதியான பல்லாவரத்தில் விநியோகிக்கப்பட்ட கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி உடல்நலன் பாதிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கழிவுநீர் கலந்த, நிறம் மாறிய குடிநீர் பல நாட்களாக விநியோகிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து, உடல்நலன் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாசடைந்த குடிநீரை குடித்ததால் தான் இப்பாதிப்பு என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களே குற்றம் சாட்டும் போது அதை சரி செய்ய தான் தமிழக அரசு முன்வர வேண்டும்.

எனவே தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுவும் மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் போது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் விநியோகத்தில் குறைபாடுகள் இருக்கக்கூடாது. ஏனென்றால் மாசடைந்த குடிநீரானது உடல்நலனை பாதித்து, உயிருக்கு கேடு விளைவிக்கும். எனவே தமிழக அரசு குடிநீரின் தரத்தை உறுதி செய்யவும், முறையாக விநியோகம் செய்யவும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் மாநிலத்தில் எப்பகுதியிலும் நடைபெறாமல் இருக்கவும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்