"மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை" - அமைச்சர் சேகர்பாபு
|பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, 'அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அவருக்கு வேறு வேலை இல்லை.. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்..அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறிவிட்டு சென்றார்.
முதல்-அமைச்சரின் இந்த பதில், பா.ம.க.வினரை கொந்தளிக்க வைத்தது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களுடைய உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை. அதை விட்டுவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாஸை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி உள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லை என்றால் 2006இல் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்க முடியாது. அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை. எங்களுடைய உரிமை. அதனால் அறிக்கை விடுகிறோம். தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் தான் அறிக்கை விடுகின்றோம். அந்த நல்ல யோசனைகளைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?.
கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதல்-அமைச்சர் கண்ணியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதல்-அமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதல்-அமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் எள்ளளவும் தவறு இல்லை" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.