வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: விவசாயிகள் கவலை
|கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரே மாதத்தில் வைகை அணை நீர்மட்டம் 17 அடி சரிந்தது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. குறிப்பாக மதுரை நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தேனி மாவட்டத்தில் போதிய அளவில் பெய்யவில்லை. இருப்பினும் அவ்வப்போது பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்தது.
அதன்படி, கடந்த மாதம் 10-ந்தேதி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது. அதன்பிறகு மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக திகழும் மூலவைகை, கொட்டக்குடி, சுருளி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது. மேலும் பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைவாக இருந்தாலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் நீர்வரத்து குறைவு மற்றும் கூடுதல் தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. கடந்த மாதம் 65 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்றைய நிலவரப்படி 48 அடியாக சரிந்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில், அணையின் நீர்மட்டம் 17 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைகை அணை நீர்மட்டம் நேற்று 48.85 அடியாக காணப்பட்டது. மேலும் நீர்மட்டம் சரிந்ததால் அணையில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இதுவரை போதிய அளவு பெய்யவில்லை. இதேபோல் வைகை அணையிலும் நீர்மட்டம் சரிந்துள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.