
சென்னை
வாகனத்தில் இந்தியில் எழுதியதால் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டாரா? - தமிழக அரசு விளக்கம்

வாகனத்தில் இந்தியில் எழுதி இருந்ததால் தாக்கப்பட்டதாக கூறி வடமாநிலத்தவர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இதுதொடர்பான அதிருப்தி தலைநகர் டெல்லி வரை எதிரொலித்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர் தனது மகனுடன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவரது வாகனத்தில் 'பாரத் மாதா கி ஜே' என்று இந்தியில் எழுதி இருந்ததால் தாக்கப்பட்டதாக கூறி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் இடம்பெற்ற நபர் தனக்கு நடந்ததாக கூறும் இந்த சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்ததாக தெரிவித்து அவரது யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த பிறகு தற்போது சென்னைக்கு வந்திருப்பதாக கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது. இதை திரித்து தமிழ்நாட்டில் அவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.