"விருதுநகர் மண் பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கியது.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
|விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விருதுநகர்,
2 நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனையடுத்து நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காட்சி கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் பின்னர் வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருட்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கிய மண் விருதுநகர். பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது, அவரது மகன் மாதிரி அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. எனது திருமணத்திற்கு வந்து காமராஜர் வாழ்த்தியதை மறக்க முடியாது. விருதுநகர் என்றதும் அனைவரின் எண்ணத்திலும் வருபவர் சங்கரலிங்கனார்.
விருதுநகரில் 95 சதவிதத்திற்கும் மேல் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும். இதற்கென்று புதிய நிதியம் உருவாக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் ரூ.41 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காளிங்கபேரி, வெம்பக்கோட்டை அணைகள் மேம்படுத்தப்படும். காரியாபட்டி தெற்கு ஆற்றில் புதிய அணை கட்டப்படும். அருப்புக்கோட்டை அருகே ரூ.350 கோடியில் புதிய சிப்காட் அமைக்கப்படும். கவுசிகா ஆறு, கஞ்சம்பட்டி கண்மாய் சீரமைக்கப்படும்.
சிவகாசியில் ரூ.18 கோடியில் மாநாட்டு கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். 3 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றே நினைக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒருவர் பொய் சொல்லலாம். ஆனால் ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக் கூடாது. ஆனால் இனி பழனிசாமி அளவிற்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி பழமொழி சொல்லும் அளவிற்கு புளுகு மூட்டையை இபிஎஸ் அவிழ்த்துவிடுகிறார்.
உங்கள் ஆணவத்திற்காகவே தமிழ்நாட்டு மக்கள் உங்களை தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் நலத் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல், பதவி சுகத்திற்காக கரப்பான்பூச்சியைப்போல ஊர்ந்து சென்ற உங்க பெயர வைக்க முடியுமா..?" என்று அவர் கூறினார்.