விஜய் கட்சி மாநாடு: விக்கிரவாண்டியை நோக்கி சாரை சாரையாக வரத் தொடங்கிய தொண்டர்கள்
|விஜய் மாநாட்டையொட்டி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழுப்புரம்,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.
மாநாட்டிற்காக நடிகர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் பகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிய தொடங்கி உள்ளனர்.
காலை 10 மணிக்கு திறக்கப்பட இருந்த மாநாட்டு திடல், கூட்டம் காரணமாக முன்கூட்டியே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதான தேசிய நெடுஞ்சாலை அருகே மாநாட்டு திடலுக்கு செல்ல 3 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 வழிகளிலும் தொண்டர்கள் வர தொடங்கி உள்ளனர். மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் எல்லாம் இளைஞர் படையாகவே காட்சி அளிக்கிறது. 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மாநாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராள மானோர் கடந்த ஒரு வாரமாகவே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளின் அறைகளை முன்கூட்டியே புக்கிங் செய்து தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.