விழுப்புரம்: பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள்; ஒருவர் உடல் மீட்பு
|விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 சசோதர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அந்தப் பகுதியை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்களான விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விக்ரம் மற்றும் சூரியா ஆகியோர், அண்ணன் லோகேசை காப்பாற்றுவதற்காக அவர்களும் பக்கிங்காம் கால்வாய்க்குள் குதித்தனர்.
இந்த சூழலில் அங்கு கால்வாயின்நீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் மூன்று பேரும் மாயமாகினர். இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் அவர்களை தேடி அங்கு சென்றனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் கால்வாய் அருகில் இல்லை என்பது தெரிந்தது.
மேலும் அவர்கள் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அச்சமடைந்த அந்த பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கால்வாயில் விழுந்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இரவு நேரம் ஆனதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டநிலையில், மயமான லோகேஷ் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர்களான இரட்டையர்கள் விக்ரம், சூர்யாவை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.