
விழுப்புரம்
விழுப்புரம்: தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு

தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் (23-ந்தேதி) நடந்த வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது, வாய்க்கால் நடுவில் இருந்த பாறையை அகற்றும் பொருட்டு வெடிவைத்து தகர்த்துள்ளனர். அப்போது, சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சுமி என்பவரின் மகள் காயத்திரியின் (வயது 10) தலையில் விழுந்துள்ளது.
இதில், பலத்த காயமடைந்து சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.