விழுப்புரத்தில் மழை: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் துண்டிப்பு
|தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர் மழையால் குளம், ஏரி நிரம்பியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழை வெள்ளம் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.