விழுப்புரம்: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவிகள் - ஒருவரின் உடல் மீட்பு
|விழுப்புரத்தில் 2 மாணவிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி, ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் ஆபத்தை உணராமல் பல பகுதிகளில் பொதுமக்கள் மீன்பிடித்தும், ஆற்றில் இறங்கி குளித்தும் வருகின்றனர். இந்த நிலையில், கிளியனூர் அருகே புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவிகள் நர்மதா மற்றும் அணுஸ்ரீ ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் நர்மதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நர்மதா உயிரிழந்தார். மேலும் அணுஸ்ரீயின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.