'விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்' - துரை வைகோ
|விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தென்காசி,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்கக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய விஜய், அரசியலை 'விஷ பாம்பு' என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"விஜய் சினிமா வானில் ஜொலிக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் என்பது ஒரு கடினமான உலகம். நான் அரசியலுக்கு வரும்போது 'நச்சு நிறைந்த அரசியல்' என்று சொன்னதுபோலவே, விஜய்யும் அரசியலை 'விஷ பாம்பு' என்று சொல்லியிருக்கிறார்.
விஷ பாம்பு என்பது மதவாத சக்திகள்தான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்றக் கூடாது. அதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது தெரியாமலோ விஜய் துணை போய் விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் படித்தவர், விவரமானவர். கண்டிப்பாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்."
இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.