"விஜய் அரசியலில் சாதிக்க வாய்ப்பே இல்லை.." - ரஜினிகாந்தின் சகோதரர் பரபரப்பு பதில்
|விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை,
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அண்மையில் தனது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழகத்தில் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முழுநேர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளார்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "வரட்டும், கமலை போன்று விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும். அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது. விஜய் தற்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. விஜயால் அரசியலில் சாதிக்க வாய்ப்பு இல்லை. முயற்சி செய்து பார்க்கட்டும்.
அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளது. அதனால் வந்துள்ளார். வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவரின் செயல்பாடுகளை பார்க்கலாம். எனினும், தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம்" என்று சத்திய நாராயண ராவ் கூறினார்.