
வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு சம்மன் வழங்கிய சிபிசிஐடி போலீசார்

வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக 3 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துராஜா ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்ததில் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை திரட்டி, தாக்கல் செய்தனர்.
இதையடுத்து 3 பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததை சுட்டிக்காட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 3 பேரையும் வருகிற 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காவலர் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் இன்று வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று சம்மன் வழங்கினர். அவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது குடும்பத்தினரிடம் சம்மன் வழங்கப்பட்டது. இதனால் 11-ம் தேதி 3 பேரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.