< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேலூர்: கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் - வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
|29 Dec 2024 9:07 PM IST
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எல்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வருபவர் மோசஸ். அரசு பள்ளி ஆசிரியரான இவர், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் தனது சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் வீட்டில் இருந்த 25 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெளியூர் சென்ற ஆசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.