மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் வாஜ்பாய்: மு.க.ஸ்டாலின் புகழாரம்
|மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் வாஜ்பாய் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100- வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் (சதைவ் அடல்) ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.