< Back
மாநில செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்வு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்வு

தினத்தந்தி
|
14 Dec 2024 10:24 AM IST

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதன்படி நேற்று தேனி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை வினாடிக்கு 139 கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 2 மணிக்கு கிடுகிடுவென உயர்ந்தது. வினாடிக்கு 13,680 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாசனம், குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 49.50 அடியாக இருந்தநிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 55.25 அடியை எட்டி உள்ளது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்