< Back
மாநில செய்திகள்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவகாரம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அவகாசம்
மாநில செய்திகள்

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவகாரம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அவகாசம்

தினத்தந்தி
|
24 Oct 2024 7:51 PM IST

வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை,

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் 194 பேர் தரப்பில், நிலம் வள்ளலார் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிடப்பட்டது.

மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் சர்வே எண்களை வழங்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் 194 பேர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே சமயம், நிலத்தை வகை மாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய உத்தரவுகளை பெறுவதற்கு 3 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதற்கு ஆவண ஆதாரங்களை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என 194 பேர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலத்தை வகை மாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து திருத்தி அமைக்கப்பட்ட உத்தரவுகளை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்