குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை
|பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி,
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இடைவிடாது தொடர்ந்து மழை பெய்தது. இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேரம் செல்லச்செல்ல வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது.
நேற்று இரவு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் அருவி பகுதிகளில் உள்ள கைப்பிடி உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும், அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. சிற்றாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு சிற்றாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்காசி வாழ் மக்களை மிரள வைத்துள்ளது.
இதற்கிடையே, பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க, தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசியின் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குண்டாறு அணை நிரம்பியதால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணைக்கு வரும் 345 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமாநதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை அந்தந்த பகுதியில் உள்ள கோயில்கள், தேவாலயங்ள், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை ஓரம் வசித்து வரும் மக்களுக்கு விடுக்கப்பட்டது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.