
சென்னை
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் இளையராஜாவை நேரில் சந்தித்து, அவர் அரங்கேற்றம் செய்ய உள்ள 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இளையராஜா தற்போது 'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. இதற்கு திரைப்படத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இளையராஜாவை நேரில் சந்தித்து அவர் அரங்கேற்றம் செய்ய உள்ள 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள எல்.முருகன், "தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி அய்யா இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.