< Back
மாநில செய்திகள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா.விருது: முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா.விருது: முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
8 Nov 2024 4:04 PM IST

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐ.நா.விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான (United Nation Interagency Task Force Award)விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது, ஆகிய இரண்டு விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஐ.நா.விருது:-

கடந்த 25 செப்டம்பர் 2024 அன்று நியூயார்க்கில் நடந்த 79-வது ஐ.நா.பொது சபையின் லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ் கூட்டத்தில் 2024-க்கான டாஸ்க் போர்ஸ் விருதுகள் (Task Force Awards 2024) அறிவிக்கப்பட்டது. புதுமை மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தல் உட்பட தொற்றாநோய்கள் மற்றும் மனநலம் தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகரிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கொள்கை மற்றும் தர நிலையுடன் இணைந்து திறனுதவித் தொழில் நுட்பவியல் பணியின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்க இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதில் சுகாதார அமைச்சகங்கள் அல்லது சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் என்ற பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் தமிழ்நாட்டை உலகத்திற்கே முன்மாதிரியான மாநிலமாக விளங்கச் செய்கிறது.

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில் இரண்டாவது இடத்திற்கான விருது:-

கடந்த 20.09.2024 அன்று "Global Food Regulators Summit-2024", பாரத் மண்டபம், புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் உணவு பாதுகாப்பு துறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இந்திய அளவில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது, தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்