
கவிஞர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

கவிஞர் நந்தலாலா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி,
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்தலாலா (வயது 69). தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க துணைத் தலைவராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். உடல்நலக்குறைவால் பெங்களூருவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது உடல் ஆம்புலன்சில் திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் உடனிருந்தனர்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலைசிறந்த கவிஞர் - பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடல்நலக்குறைவால் மறைவுற்ற நிலையில், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நந்தலாலாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது பெரும் பற்று கொண்டவர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மதிப்பும் - மரியாதையும் கொண்ட பண்பாளர். திரு.நந்தலாலா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், த.மு.எ.க.ச தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம். கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்தாலும், அவரது பணிகள் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.