< Back
மாநில செய்திகள்
மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்தார் - டி.டி.வி.தினகரன்
மாநில செய்திகள்

'மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்தார்' - டி.டி.வி.தினகரன்

தினத்தந்தி
|
7 Dec 2024 8:33 PM IST

தேர்தலில் மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;-

"தேர்தல் அரசியல் மூலம் மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் பிறப்பால் ஒருவர் முதல்-அமைச்சராவதாக ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ஜெயித்துவிட்டுதான் வந்திருக்கிறார். அதை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?

தேர்தலில் நிற்காமல் நேரடியாக பதவிக்கு வந்தால் அதை குறை சொல்லலாம். ஒருவரின் தந்தையோ, தாயோ அரசியலில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது இல்லை. சில பதவிகளுக்கு அனுபவம் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நான் தி.மு.க.விற்கோ, அல்லது வாரிசு அரசியலுக்கோ ஆதரவாக பேசவில்லை. எதார்த்தமான கருத்தை சொல்கிறேன்.

எந்த கட்சியாக இருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்வார்கள். அதை எதிர்க்கட்சிகள் முறியடிப்போம் என்று சொல்வது தவறு இல்லை, ஆனால் அதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும்? மக்கள்தான் இறுதி முடிவெடுக்கப் போகிறார்கள்."

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்