< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
மாநில செய்திகள்

சென்னையில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

தினத்தந்தி
|
12 Nov 2024 1:45 PM IST

கனமழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டார். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ, பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டில் 1.06 செ.மீ., திருவள்ளூரில் 0.6 செ.மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம். 1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் ( Jet Rodding ) இயந்திரங்களும் தயாராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல, அக்டோபர் மாதத்தில் பெய்த மழை கொடுத்த அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

சென்னையில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தியிருக்கின்றோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். மக்களும், பத்திரிகை நண்பர்களும், ஊடகங்களும் எங்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்துவிடுவோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்