உடன்குடி: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் - உடற்கல்வி ஆசிரியர் கைது
|உடன்குடியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடியில் சல்மா என்ற தனியார் மெட்ரிக்லேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பொன்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது மாணவிகளுக்கு மதுகொடுத்து உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
இதனிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்சிங் திருச்செந்தூர் அழைத்து வரப்பட உள்ளார். முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பொன்சிங்கை வேலையை விட்டு உடனடியாக நிறுத்திவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.