த.வெ.க. தலைவர் விஜய் எனது தம்பி, எதிரியல்ல - சீமான்
|ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சி,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? அவர் என்ன ஆரியப்படைத் தலைவரா? பணம் கொடுத்தால்தான் தி.மு.க.வினர் வேலை செய்வார்கள். ஆயிரம் இருந்தாலும் நடிகர் விஜய் எனது தம்பி; அவர் எனது எதிரி அல்ல. தி.மு.க.தான் எனது எதிரி.
இஸ்லாமியர்கள் எனக்கு இதுவரை வாக்களித்தது இல்லை. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 6-வது கடமையாக தி.மு.க.வுக்கு வாக்களிப்பதை வைத்துள்ளார்கள். இறைத்தூதரே வந்து சீமானுக்கு ஓட்டு போடுங்கள், தி.மு.க.வுக்கு போடாதீர்கள் என்று சொன்னால் கூட , இந்த மக்கள் நீங்கள் இறைத்தூதரே இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனென்றால் நான் பா.ஜ.க.வின் பி டீமாம்; நான் பி டீம் என்றால் ஏ டீம் யாரு? தி.மு.க.தானே!
அ.தி.மு.க.வை கண்டு கூட தி.மு.க. பயப்படுவதில்லை. என்னை பார்த்துதான் பயப்படுகிறது. இதுவரை இருந்ததிலேயே மிக மோசமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் கூறினார்.