த.வெ.க. கொடி விவகாரம்: விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்
|5 நாட்களுக்குள் கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இதற்கிடையே தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி தொடர்பாக பகுஜன் சமாஜ் புகார் அளித்திருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு பதில் அளித்து இருந்தது.
அதில் "இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தற்காலிக சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தை பெற முடியும். எனவே ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், "தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக யானை உள்ளது. த.வெ.க. கொடியில் உள்ள யானை சின்னம், தேர்தல் ஆணைய விதிமுறையை நீக்குவதாக உள்ளது. நோட்டீசை சட்டமுறை அறிவிப்பாக கருதி சின்னத்தில் யானை படத்தை நீக்குமாறு அறுவுறுத்துகிறோம். 5 நாட்களுக்குள் கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என எச்சரிக்கப்பட்டுள்ளது.