மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு
|விக்கிரவாண்டி வருகிற 27-ந் தேதி தவெக மாநில மாநாடு நடைபெறுகிறது.
சென்னை,
திரைப்பட முன்னணி நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டுள்ள அவர், தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ந் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் கடந்த சில நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று புதுச்சேரி திரும்பிய அவருக்கு மாலை வீட்டில் இருந்தபோது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சரவணன் உடல் புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக நிர்வாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கட்சி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.