டங்ஸ்டன் சுரங்க தீர்மானம்: மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
|டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தனித் தீர்மானம் மீது சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து தனித்தீர்மானம், பரபரப்பான விவாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் அரசின் தீர்மானம் முதல்-அமைச்சர் ஒப்புதலோடு தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டது. தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் இன்று இரவுக்குள் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துறை செயலாளரிடம் இருந்து தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.