
எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கும் டங்ஸ்டன் போராட்டக் குழு

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
சென்னை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இதனை தொடர்ந்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசு வெடித்து, பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினர்.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை 4 மணிக்கு டங்ஸ்டன் போராட்டக் குழுவினர் சந்தித்து பேச உள்ளனர். டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக இருந்ததற்கு குழுவினர் நன்றி கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.