
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரையில் மத்திய மந்திரிக்கு இன்று பாராட்டு விழா

மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும், அண்ணாமலைக்கும் மதுரையில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
மதுரை,
மதுரை மேலூர் அருகே அரிட்டாப்பட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் போது அ.வெள்ளாலப்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று மக்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்க திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதியளித்தார்.
இதனிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திட்டம் ரத்துசெய்யப்பட்டதற்காக அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், அ.வள்ளாலப்பட்டிக்கு நேரில் வந்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதியளித்துடன் விவசாயிகள் சங்க பிரநிதிகள் குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், சுரங்க திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும் அ.வள்ளாலப்பட்டியில் இன்று பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்படுகிறது.
பெருங்குடி, கடச்சனேந்தல் மற்றும் அழகர்கோயில் ஆகிய இடங்களில் இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அ.வள்ளாலப்பட்டி செல்கின்றனர். அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மக்களின் வரவேற்பை பெற்று பேசுகின்றனர். விழா முடிந்து அரிட்டாபட்டி வழியாக மதுரை விமான நிலையம் செல்கின்றனர்.