டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது - எடப்பாடி பழனிசாமி
|டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு தவறுகளை மறைக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தங்கள் தவறுகளை மறைக்கிறது. டங்கஸ்டன் சுரங்கம் தீர்மானத்தின் மீது சரியான வாதத்தை சட்டமன்றத்தில் நான் முன்வைத்தேன். ஆனால் முதல்-அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் அதற்கு முறையான பதிலளிக்க முடியாமல் ஏதேதோ சொல்லி, அவர்கள் செய்த தவறுகளை மறைக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் கனிமவள திருத்தச் சட்டம் 2023 கொண்டு வரப்பட்டபோது தி.மு.க. எம்.பி.க்கள் ஒருவர் கூட அதை எதிர்த்து பேசவில்லை. அதோடு, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்தின் விவரத்தை இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.