< Back
மாநில செய்திகள்
டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்:  மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
மாநில செய்திகள்

டங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்

தினத்தந்தி
|
22 Nov 2024 4:17 AM IST

டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை ,

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள டங்க்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பின் வாயிலாக நான் அறிந்துகொண்டேன். (https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071441)

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ள 2015.51 எக்டர் கனிமத் தொகுதியானது பல்வேறு சூழல் மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நவம்பர் 22,2022 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மாநில சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான துறை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை மாவட்டத்தின் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 193.215 எக்டர் பரப்பிலான பகுதியை அறிவித்தது. இந்த பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியைச் சேர்ந்த மொத்த பரப்பும் தற்போது ஏலம் விடப்பட்டுள்ள கனிமத் தொகுதியின் 2015.51 எக்டர் பரப்பிற்குள் வருகிறது.

வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அடையாளங்கள்:

ஏலத்தில் விடப்பட்ட இந்த கனிமத் தொகுதிக்குள் தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த சின்னங்கள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடமாக இது அமைந்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட கோவில்கள், 200 ஆண்டுகள் பழமையான தர்கா உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. சூழல் மற்றும் வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி:

கனிமத் தொகுதியின் எல்லைக்குள் உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏழு சிறுகுன்றுகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலப்பரப்பை சுரங்கம் அமைப்பதற்கான ஏலப்பட்டியலில் சேர்த்ததே மிகவும் தவறாகும். இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சூழல் மற்றும் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நிலப்பரப்பு அழியும் என்பதாலும் வேளாண்மை, மேய்ச்சல் உள்ளிட்டவையும் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடுமையான சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என்பதால் இக்கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலத்தில் வழங்கியதை ரத்து செய்வதோடு அடுத்தகட்ட ஏலங்களிலும் இப்பகுதியை இடம்பெறச் செய்யக்கூடாது என துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்