< Back
மாநில செய்திகள்
டங்ஸ்டன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

டங்ஸ்டன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
29 Nov 2024 9:26 AM IST

சுரங்க நடவடிக்கை மேற்கொண்டால் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்,

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, பிரதமர் மோடி உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சரின் 3-10-2023ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலமாக ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி தனது 2-11-2023 நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த 7-11-2024 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது. மேற்படி டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம், இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது.

இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும். மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்