'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
|டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. அழிவு பாதைக்கு செல்லும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் கூறியதாவது;-
"பா.ஜ.க. அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் கூறிவிட்டார்.
டி.டி.வி.தினகரன் தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார். அ.தி.மு.க. என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கம். யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. கட்சியின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பொதுச்செயலாளர் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவுதான் தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்காது."
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.