
கையெழுத்து இயக்கம் நடத்த தவெக திட்டம்

தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் தவெகவை சேர்ந்த 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், பா.ஜனதாவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட பிரபலங்களும், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து த.வெ.க. நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்க உள்ளார். எனவே தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பெண்கள் பாதுகாப்பு வலியுறுத்தியும், மும்மொழி கொள்கையை எதிர்த்தும் கையெழுத்து இயக்கம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் தவெக ஆண்டு விழாவையொட்டி மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், ஒருவர் பாட்டுப்பாட மற்றொருவர் அதற்கேற்ற இசையுடன் நடனமாட தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை. சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று உள்ளனர். #GetOut என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.