திருச்சி: காவிரி ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் மாயம்
|மாயமான மாணவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அரையாண்டு இறுதி தேர்வு முடிந்ததும் தங்களது வீடுகளுக்கு செல்லாமல் காவிரியில் குளிக்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளி சீருடைகளை மாற்றி விட்டு காவிரி ஆற்றிற்கு சென்றனர்.
குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கிய அந்த 10 மாணவர்களும் படித்துறை பகுதியில் போதுமான அளவில் தண்ணீர் இல்லாததால் நீச்சல் அடிக்கும் ஆசையில் காவிரி ஆற்றின் மைய பகுதிக்கு சென்றனர். ஆனால் மைய பகுதியில் ஆற்றில் நீரோட்டத்தின் இழுப்பு சக்தி அதிகமாக இருந்ததால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்தனர்.
இதில் ஓரளவு நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரை சேர்ந்தனர். ஆனால் நீர் சுழற்சியில் சிக்கிக்கொண்ட ஜாகீர் உசேன் (வயது 15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களும் கரை சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.