திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு... போலீஸ்காரர் பணிநீக்கம்
|போலீஸ்காரர் வினோத் மீது துறை ரீதியில் விசாரணை நடந்து வந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ஆர்.வினோத் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு (2023) அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது, ஒரு கிராமத்தை சேர்ந்த திருநங்கையின் வீட்டிற்குள் இரவில் அத்துமீறி நுழைந்து திருநங்கைக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக போலீஸ்காரர் வினோத் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் வினோத் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் துறை ரீதியில் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், போலீஸ்காரர் வினோத் சம்பந்தப்பட்ட திருநங்கையை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது உண்மைதான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தற்போது திருவோணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஆர்.வினோத்தை பணியில் இருந்து விடுவித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்த போலீஸ்காரர் வினோத் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.