தென்காசி- பகவதிபுரம் இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
|100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
செங்கோட்டை,
தமிழகத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் ெரயில்வே வழித்தடமான தென்காசி- கொல்லம் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த குறிப்பிட்ட தொலைவில் உள்ள பாதையில் ரெயில்கள் குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது தென்காசியில் இருந்து செங்கோட்டை பகவதிபுரம் வரை சமதள பாதையில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் நேற்று 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பகவதிபுரம் முதல் புனலூர் வரை உள்ள மலை வழித்தடத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், புனலூரில் இருந்து கொல்லம் வரையிலான வழித்தடத்தில் மீண்டும் 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலானது இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது, ரெயில்வே உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். அதிவேகத்தில் ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிர்வு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். சோதனை ஓட்டத்தின் போது அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.