< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் அருகே சோகம்: தந்தை-மகன் உயிரை பறித்த கட்டில்
மாநில செய்திகள்

திண்டுக்கல் அருகே சோகம்: தந்தை-மகன் உயிரை பறித்த கட்டில்

தினத்தந்தி
|
5 Nov 2024 7:35 AM IST

தூங்கும்போது இரும்பு கட்டில் கால் சரிந்ததில் தந்தை-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (வயது 35). டெய்லர். இவரது மனைவி லோகேஸ்வரி (30). நத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு கார்த்திக்ரோஷன் (10), யஷ்வந்த் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்திக்ரோஷன், சாணார்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

தினமும் இரவு கோபிகிருஷ்ணன், தனது மகன் கார்த்திக்ரோஷனுடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் கட்டிலில் வழக்கமாக படுத்து தூங்குவார். நேற்றுமுன்தினம் இரவு, லோகேஸ்வரி பணிக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார். கோபிகிருஷ்ணன், தனது மகனுடன் ஒரே இரும்பு கட்டிலில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். யஷ்வந்த், தனது பாட்டி சாந்தியுடன் தரைத்தளத்தில் உள்ள அறையில் படுத்து தூங்கினான்.

இந்தநிலையில் இரும்பு கட்டில் காலில் உள்ள இணைப்பு 'போல்ட்கள்' திடீரென்று கழன்று விழுந்தது. இதனால் கட்டில் ஒரு பக்கமாக சரிந்தது. அப்போது கட்டில் கம்பிகளுக்கு இடையே கோபிகிருஷ்ணன், கார்த்திக்ரோஷன் ஆகியோரின் கழுத்து பகுதி சிக்கி கொண்டது. இதில் தூக்கத்தில் இருந்த 2 பேரும் கழுத்து நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை வெகு நேரமாகியும் கோபிகிருஷ்ணனும், கார்த்திக்ரோஷனும் கீழே இறங்கி வராததால் சந்தேகமடைந்த சாந்தி மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது 2 பேரும் கட்டில் காலில் கழுத்து நசுங்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்