
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 March 2025 8:09 PM IST
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (வயது 48) மாரடைப்பால் காலமானார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக விருமன் படத்தில் மனோஜ் பாரதி நடித்து இருந்தார். தாஜ்மஹால் படத்தில் நடிகராஜ அறிமுகம் ஆனார் மனோஜ் பாரதி.
- 25 March 2025 7:55 PM IST
தமிழ்நாட்டின் இன்று பதிவான வெப்பநிலை அளவு. அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
- 25 March 2025 7:31 PM IST
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 9-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
- 25 March 2025 7:06 PM IST
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் நேற்றிரவு பணி முடிந்து விடுதிக்கு சென்றபோது மர்ம நபர் முகத்தை மூடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தரப்பட்டு விசாரணை நடைபெறுவதாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியி டீன் சத்தியபாமா கூறியுள்ளார்.
- 25 March 2025 6:49 PM IST
குமரி அதிவிரைவு ரெயிலில் இருந்து வெளியேறிய புகை
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் இருந்து புகை வெளியேறியதால் நுங்கம்பாக்கத்தில் குமரி எக்ஸ்பிரஸ் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு புறப்பட்ட அதிவிரைவு ரெயிலின் எஸ் 6 பெட்டியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட ரெயில் சீரமைக்கப்பட்ட பிறகு புறப்பட்டு சென்றது.
- 25 March 2025 6:44 PM IST
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக பொது ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக்கோரி வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
- 25 March 2025 6:43 PM IST
விழுப்புரம்: விபத்தில் மூளைசாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் உடலுக்கு மாவட்ட கலெக்டர், காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
- 25 March 2025 6:01 PM IST
இந்தி தெரியாமல் 80 லட்சம் தமிழர்கள், வேலை இல்லாமல் உள்ளனர். இந்தியாவின் தொடர்பு மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும் என்று சென்னையில் நடந்துவரும் பாஜகவின் இப்தார் விழாவில் புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் பேசினார்.
- 25 March 2025 6:00 PM IST
எழும்பூரில் பாஜக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 25 March 2025 5:44 PM IST
சென்னை அண்ணா நகர் ஐஓபி வங்கியில் தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 43 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை என ஊழியர் புகார் கூறியுள்ளார். வங்கி மேலாளர் உதவியுடன் திருட்டு நடந்திருப்பதாக வங்கியில் பணிபுரியும் அசோக்குமார் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.