
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 March 2025 7:37 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் `கனிமா' பாடல் BTS-ஐ காமிக்காக படக்குழு வெளியிட்டு உள்ளது. இத்திரைப்படம் வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது.
- 24 March 2025 7:19 PM IST
எம்.பி.க்களின் சம்பளம் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 24 சதவீதம் உயர்த்தி வழங்கப்படவுள்ளது என மத்திய அரசு இன்று அறிவித்து உள்ளது. முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ரூ.1 லட்சம் சம்பளம் பெறும் எம்.பி. ஒருவர் இனி, ரூ.1.24 லட்சம் சம்பள தொகையாக பெறுவார்.
அவருடைய தினப்படி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதேபோன்று, முன்னாள் எம்.பி.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- 24 March 2025 7:14 PM IST
சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 234 தொகுதிகளில் உள்ள பிரதான பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகள் தங்கள் தொகுதியில் உள்ள பிரதான 5 பிரச்சினைகள், மக்களின் கோரிக்கைகளை கண்டறிந்து வரவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்து நிறைவேற்றாமல் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து கூட்டத்திற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- 24 March 2025 6:13 PM IST
அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். இதில், தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின் குறைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
- 24 March 2025 5:18 PM IST
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடம் மாற்றும்படி, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இன்று பரிந்துரைத்து உள்ளது.
- 24 March 2025 5:02 PM IST
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `ஜன நாயகன்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
- 24 March 2025 4:33 PM IST
கடலூர், சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பெரிய பந்து போன்ற அந்த பொருளின் மீது மாலத்தீவு என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் காணப்பட்டன. இதனால், கடல் எல்லை பகுதிக்கு பயன்படுத்தப்படும் மிதவை பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- 24 March 2025 4:12 PM IST
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி வித்யா என்பவர் தாக்கல் செய்த வழக்கில், அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.
இதற்கு அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதற்காக, அதனை சலுகையாக எடுத்து கொள்வீர்களா? என செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
- 24 March 2025 3:56 PM IST
தமிழகத்தின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது. நதிநீர் பிரச்சினைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம் என சட்டசபையில் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பேசினார்.