இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 April 2025 7:41 PM IST
மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை முதல் 13-ந்தேதி வரையிலான நாட்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 9-ந்தேதி (நாளை மறுநாள்), இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதிக்கான மந்திரிகள் மட்டத்திலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற முடிவாகி உள்ளது.
சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். அதனுடன் அந்த நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துகிறார்.
- 7 April 2025 7:03 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
- 7 April 2025 7:02 PM IST
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்ய முடிவானது. இதன்படி, அக்கட்சியின் துணை பொது செயலாளர் ஆ. ராசா சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
- 7 April 2025 6:33 PM IST
மியான்மரில் உள்நாட்டு போர், நிலநடுக்கம் ஆகியவற்றால் மக்கள் பரிதவித்து வரும் சூழலில், அடுத்த வாரத்தில் நாடு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்து உள்ளது.
பலத்த காற்றுடன், இடி, மின்னல் மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றுடன் கூடிய எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிவிப்பு தெரிவித்தது.
- 7 April 2025 6:01 PM IST
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாட்டியோடு குழந்தைகள் விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அப்போது, தோட்டத்தில் இருந்த இரும்பு வேலியை பிடித்து நடக்க முயற்சி செய்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில், மின்சாரம் பாய்ந்து பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- 7 April 2025 5:38 PM IST
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியானது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆத்தூர் தோட்டக்காரன் வீதி குடியிருப்பு பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். வீட்டில் இருந்தவர்கள் குரல் கொடுத்ததும், கொள்ளையர்கள் உடனடியாக தப்பியோடினர்.
- 7 April 2025 5:24 PM IST
மேற்கு வங்காளத்தில், அரசால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என 25,753 பேர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால், பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுடைய கண்ணியம் காக்கப்பட எல்லாவற்றையும் நான் செய்வேன் என கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அரசு கட்டுப்படுகிறது. ஆனால், கவனத்துடனும் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் நிலைமை கையாளப்பட்டு உள்ளது என உறுதி செய்யப்படுவதற்கான தொடக்க நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தகுதியுள்ள நபர்கள் பள்ளியில் இருந்து வேலையை இழப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.
வேலையிழந்த அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் எனக்கு தண்டனை வழங்க யாரேனும் விரும்பினால், சிறைக்கு செல்லவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- 7 April 2025 5:11 PM IST
குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 7 April 2025 4:40 PM IST
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி அறிவித்து உள்ளார். இதன்படி, இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.