டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு
|டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தியது.
இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 724 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன.
இந்த நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இன்று காலை தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே இருந்த 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக 559 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9, 491 ஆக அதிகரித்துள்ளது. குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.