
சென்னை
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை எதிர்ப்பதற்காகவும், இது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, விசிக, தவெக, விடுதலை சிறுத்தைகள் உள்பட 53 கட்சிகள் கலந்துகொண்டன. பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள எதிர்ப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.
நியாயமற்ற தொகுதி மறுசீரமைப்பு முயற்சியை தடுக்க அரசியல் வேறுபாடுகளை களைந்து கூட்டத்தில் கலந்துகொண்டு உறுதியான, சமரசமற்ற செய்தியை வெளிப்படுத்திய கட்சிகளுக்கு நன்றி.
இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தெளிவான செய்தியை வெளிப்படுத்துகிறது.
மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். தேசிய நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
1971 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்டுவரும் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால்,ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். எங்கள் அரசியல் உரிமைக்குரலை சூழ்ச்சி, நீர்த்துப்போகச் செய்ய முயற்சித்தால் அதை சகித்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல. ஆனால், வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு எதிரான ஆயுதமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தென்மாநிலங்களின் எம்.பி.க்கள் கூட்டுக்குழுவை அமைக்க அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு இந்த விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN
என தெரிவித்துள்ளார்.