விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை - தொல். திருமாவளவன்
|விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன் கூறுகையில், அம்பேத்கர் பற்றி இன்று எல்லோரும் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று விஜய் கூறியுள்ளார். விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை. அவ்வாறு எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு நானோ, விடுதலை சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை. இந்த விழாவில் நான் பங்கேற்காததற்கு விஜய் காரணமில்லை. விஜய்க்கும் எங்களுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை. திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது' என்றார்.