< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

தினத்தந்தி
|
4 Dec 2024 5:38 PM IST

திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. இதனால் அண்ணாமலையார் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.

அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.

அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன. மண்சரிவில் புதைந்த வீட்டில் இருந்த கூலி தொழிலாளி ராஜ்குமார், அவரது மனைவி மீனா, இவர்களது மகன் கவுதம், மகள் இனியா, ராஜ்குமாரின் உறவினர்கள் சுரேஷ் மகள் மகா, மஞ்சுநாதன் மகள் வினோதினி, சரவணன் மகள் ரம்யா ஆகிய 7 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறுதியில் மண்ணில் புதைந்த 7 பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து 7 பேரின் உடல்களுக்கும் உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர் 7 இறுதி ஊர்வல வாகனங்களில் அவர்களின் உடல்கள் தனித்தனியாக வைக்கப்பட்டு அருகில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் நின்றிந்த மக்கள் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டன. இந்த காட்சி காண்போரின் கண்களையும் கலங்க செய்தது.

மேலும் செய்திகள்